Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

Digital Marketing


 இணையவழி சந்தைப்படுத்துதல்... புதிய உத்திகள்!


இணையவழியில் சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றின் வாயிலாகப் பொருள்களையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துவதே இதற்கு முன்பு அதிகமாக இருந்து வந்தது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தற்போது இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகஇணையவழி சந்தைப்படுத்துதல் அதிகமாகி வருகிறது.

நிறுவனங்களும் இணையவழி விளம்பரப்படுத்துதலை அதிகப்படுத்தி வருகின்றன. யூ டியூப், கூகுள்உள்ளிட்டவற்றிலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. செய்தி ஊடக நிறுவனங்களின் வலைதளங்கள் உள்ளிட்டவற்றிலும் கூட விளம்பரங்கள்தனியிடம் பெறுகின்றன.

பல்வேறு வழிகளில் தற்போது இணையவழிச்சந்தைப்படுத்துதல் வளர்ந்துள்ளது. எத்தகைய நிறுவனங்களாக இருந்தாலும், இணையவழியில் விளம்பரப்படுத்தாவிடில் அந்நிறுவனம் இளைஞர்கள் உள்ளிட்டோரைச் சென்றடைய முடிவதில்லை. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதலில் நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பல்வேறு காரணங்களால் இணையவழி விளம்பரப் படுத்துதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை இணையவழியில் சென்றடைய முடிகிறது. தற்போது இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு இணையமே சிறந்த வழியாக உள்ளது. எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல் மூலமாக அவர்களைக் கவர்வது எளிதாகிறது. மற்ற வழக்கமான சந்தைப்படுத்துதல் முறைகளை விட இணையவழி விளம்பரப்படுத்துதலில் கூடுதல் நபர்களைச் சென்றடைய முடிகிறது.

மேலும் இணையவழி சந்தைப்படுத்துதல் முறையில் செலவு குறைவாக உள்ளது. மரபு வழியான விளம்பர நடைமுறைகளில் செலவு அதிகமாக உள்ளது. அதுவே இணையவழியில் விளம்பரத்தின் செலவு குறைவாக உள்ளது.

விளம்பரங்களால் யார் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள்? எந்த நேரத்தில் விளம்பரம் அதிகமாகப் பார்க்கப்படுகிறது உள்ளிட்டவற்றை இணையவழியில் எளிதில் கண்காணிக்க முடியும். அதன் மூலமாக விளம்பரப்படுத்துதலை மேலும் வலுப்படுத்த முடியும். இந்த வசதி மரபு வழி விளம்பரங்களில் இல்லை.

இணையவழி விளம்பரங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடிகிறது. விளம்பரத்தைக் காணும் வாடிக்கையாளர்கள், அப்பொருளையோ
அல்லது சேவையையோ உடனடியாக இணையவழியிலேயே வாங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். எனவே, இணையவழி சந்தைப்படுத்துதல்
முக்கியத்துவம் பெறுகிறது.

இணையவழி விளம்பரப்படுத்துதலிலும் பல்வேறு முறைகள் உள்ளன. விளம்பரப்படுத்தப்படும் பொருள்கள் குறித்தோ சேவை குறித்தோ விரிவான விவரங்களை விளம்பரங்களில் வழங்குவது அவற்றில் ஒன்று. தற்போதைய வாடிக்கையாளர்கள் பொருள்கள் மற்றும் சேவைகளின் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தாங்கள் வாங்கும் பொருள் அதிக தரமாகவும், நீடித்து உழைக்கும் வகையிலும் இருக்க வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்கள், அப்பொருள்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள விழைகின்றனர். எனவே, பொருள்கள் குறித்த விரிவான விவரங்களை விளம்பரங்களில் தெரிவிப்பது
பலனளிக்கும்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரப்படுத்தினால் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும். பல நிறுவனங்கள் தற்போது மின்னஞ்சல் மூலமாக விளம்பரப்படுத்துவதை அதிகரித்துள்ளன. இத்தகைய விளம்பரங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட நிறுவனத்துடனான வாடிக்கையாளர்களின் தொடர்பை வலுப்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பிட்ட நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பொருள்கள், புதிய சேவைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடிகிறது. எனவே, பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் வாயிலான சந்தைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றன.

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதற்கேற்ப விளம்பரப்படுத்தும் உத்திகளும் மாறி வருகின்றன. புதிய வாடிக்கையாளர்களைக் கவர வேண்டுமெனில் நிறுவனங்கள் அந்த உத்திகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞர்கள் இதில் கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை எளிதில் அணுக முடியும். 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...