Welcome

WELCOME to Education++

Showing posts with label Discipline. Show all posts
Showing posts with label Discipline. Show all posts

Wednesday, January 26, 2022

Decision Making


 முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்!

(Decision making)

வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.

காரணிகள்

தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.

தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள். முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும் சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.

ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை.

வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.

இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.

எது மெச்யூரிட்டி ?


 எது மெச்யூரிட்டி ?


(டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை)

என்னைப் பொருத்தவரை மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று.

ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை.

மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார்.

அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் முதிர்ச்சி வருகிறது.

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை.

மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளிய வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே.

அந்த பாடத்தை படித்து
வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம்
அதை முதிர்ச்சி என்கிறேன்.

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி.

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும்
கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி

நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து

ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து
நமக்கு நேரதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது
என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து

நமக்கு மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது மெச்யூரிட்டி

காணும் அனைத்திலும்
பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக
மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி

கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர் தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து
வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால் மெச்யூரிட்டி வந்திருக்கிறது என்று பொருள்

மரணத்தைப் பற்றி சிந்தனையே இல்லாமல்
இருப்பதைக் காட்டிலும்
நம்மிள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மரணமடையலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. காரணம் மரணம் குறித்த எண்ணம் மனிதனை மனிதனாக வைத்திருக்க உதவுவதால் அதற்கான ஒத்திகையை மன ரீதியாக பார்த்துக் கொண்டே இருப்பதும் என்னைப் பொருத்தவரை மெச்யூரிட்டி தான்.

டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை 

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்


 குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகள்


எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பைக் கொடுத்து, அதில் குழந்தைகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.

குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டுமானால், வளரும் பருவத்தில், அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். இதற்கு, குழந்தைகளிடம் விளையாட்டு போக்கிலேயே சில பயிற்சிகளைப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கான சில முறைகள் இங்கே:

கேள்வி கேட்பதற்கு ஊக்குவித்தல்:

குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிப்பது. கேள்வி கேட்கும் முன், அது சார்ந்த விஷயத்தில் தெளிவு இருக்க வேண்டும் என சொல்லிக் கொடுங்கள்.

பாடமாக இருந்தால், அந்த பாடத்தை முதலில் ஆழ்ந்து படித்து, அதில் எழும் சந்தேகங்களைக் கேள்வியாகக் கேட்க வேண்டும். இந்தப் பயிற்சியால், சிக்கலான விஷயங்களில் சிந்திப்பது, அதற்கு தீர்வுக்காண முடிவுகள் எடுப்பது குறித்த திறன் இளம் வயதிலேயே மேம்படும்.

செயல்வழி கற்றல்:

குழந்தைகளை ஒரே இடத்தில், அமர வைத்து கற்றுத் தரும் கல்வியால் அவர்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுமே தவிர, நினைவாற்றல் மேம்படாது. எனவே, எந்த விஷயத்தையும் குழந்தைகளின் விளையாட்டுடனே கற்றுத் தர முயற்சிக்க வேண்டும். அவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பைக் கொடுத்து, அதில் குழந்தைகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.

இது பொதுவான தலைப்பாகவோ அல்லது பாடம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அதில், நீங்கள் கேள்வி கேட்டு, குழந்தைகளைப் பதிலளிக்க வைக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல் மேம்படுவது டன், எந்த பிரச்சினையாக இருந்தாலும், எளிதில் தீர்வு காணும் பக்குவமும் கிடைக்கும்.

படமாக மாற்றுங்கள்:

குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை வரி வடிவத்தில் சொல்லிக் கொடுக்காமல், திரையில் தோன்றும் படமாக ஓட்டிப் பார்க்கும் வகையில் பயிற்சி அளியுங்கள். இதன் வழியாக அவர்களால், நீங்கள் சொல்லும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும். பாடத்தில் உள்ள வரிகள், சூத்திரங்கள் என அனைத்தையும் எளிதில் நினைவுப்படுத்த முடியும்.

உதாரணம் கொடுங்கள்:

நினைவாற்றலை மேம்படுத்துவதில் மற்றொரு பயிற்சி, உதாரணம் மூலம் கற்றுக்கொடுத்தல். பாடம் சார்ந்த விஷயங்களுக்கு, உங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறுங்கள். இதை குழந்தைகளால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அறிவாற்றலும் மேம்படும்.

ஆசிரியராக மாற்றுங்கள்:

நீங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தருவது போன்று, குழந்தைகளையும் உங்களுக்கு ஆசிரியராக மாறி, சில விஷயங்களைக் கற்றுத்தர வையுங்கள். இதன் மூலம், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படும். பிறருக்கு கற்பிக்கும்போது, இயல்பாகவே அறிவாற்லும் மேம்படும்.

அறிவு வரைபடம்:

குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிக்கலாம். இதனால், குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் திறன் உருவாகும். இதுவே, பாடத்தைப் புரிந்து கொள்வதிலும் செயல்பட வைக்கலாம்.

படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லையா?


 படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லையா?


"5 நிமிடத்திற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை... புத்தகத்தை எடுத்தால் சலிப்பாக இருக்கிறது... புத்தகத்தை எடுத்தால் கண்கள் மொபைலைத் தேடுகின்றன... தேர்வுக்குத் தயாராக முடியவில்லை...''
-இப்படிப்பட்டவரா நீங்கள்?

உங்களுக்கான சில தீர்வுகள் இதோ.
கரோனா பெருந்தொற்று கல்வித்துறையில் எதிர்பாராத அளவு மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. கரும்பலகையின் முன் மணிக்கணக்கில் இருந்த மாணவர்கள் இன்று கையடக்கக் கணினியின் முன் காத்திருக்கின்றனர். ஆசிரியருக்கு பயந்து ஓடி ஒளிந்தவர்கள் இன்று காணொலியில் ஆசிரியருக்குத் தெரியும்படியே சேட்டை செய்கின்றனர். இவ்வாறான பல மாற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

வகுப்பறையில் இருந்து படிப்பதைவிட, வீட்டில் இருந்து பாடத்தைக் கவனிப்பது, படிப்பது என்ற புதிய நடைமுறை அனைத்து மாணவர்களுக்குமே கடினம்தான். இனி வரும் காலங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நம்மை நாமே தகவமைத்துக்கொள்வது மட்டுமே எந்த ஒரு நிலையையும் சமாளிக்கும் வலிமையை நமக்குத் தரும்.

மாறுபட்ட கல்விச் சூழ்நிலையில் மாணவர்கள் படிப்பில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது எப்படி? அதற்கு எவ்வாறு திட்டமிட வேண்டும்? தேர்வுக்கு தயாராவது எப்படி? கொஞ்சம் யோசிப்போம்.

நீங்கள் ஏன் பின்தங்கியிருக்கிறீர்கள்?

நீங்கள் ஒரு காரின் ஓட்டுநர் இருக்கையில் இருப்பதற்கும், பின் இருக்கையில் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஓட்டுநர் இருக்கையில் இருந்தால் சிறிதளவு கவனச்சிதறல் கூட இல்லாமல் காரை ஓட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். அதுவே பின் இருக்கையில் நீங்கள் இருந்தால் எதைப்பற்றியும்
கவலைப்படாமல் பொழுதுபோக்கு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.
உங்களது படிப்பை நீங்கள் ஒரு பொறுப்பாக, கடமையாக, உங்களது வளர்ச்சிக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளாததால் உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனவே ஓட்டுநர்
கவனம் சாலையில் இருப்பதைப் போல உங்களுடைய கவனம் படிப்பில் குவியட்டும்.
கவனச்சிதறல்களை எவ்வாறு சமாளிப்பது?

படிப்பதை நீங்கள் ஒரு பொறுப்பாக எடுத்துக் கொள்ளும்போது, அதில் கவனம் தானாக வந்துவிடும். அதையும் மீறி படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா?

எனினும் கவனச்சிதறலைத் தவிர்க்க சில வழிகள்..

20 நிமிடப் பயிற்சி:

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் எவ்வளவு மணி நேரத்தை சரியாக உபயோகிக்கிறோம் என்று கண்காணியுங்கள். இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களை வீணாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஒரு சில மணி நேரங்களே உங்கள் படிப்பில் சிறந்து விளங்கப் போதுமானது. இதற்காக நீங்கள் ஒரு பயிற்சி செய்ய வேண்டும். இது ஒரு 20 நிமிடப் பயிற்சி. ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் இதற்காக செலவிட்டால் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாது.

இந்த பயிற்சிக்காக, அமைதியான, யாரும் தொந்தரவு செய்யாத ஓர் அறையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவறறை எடுத்துக்கொண்ட பிறகு பயிற்சியைத் தொடங்குங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த அறைக்குச் சென்று நீங்கள் என்ன படிக்க நினைக்கிறீர்களோ அந்த புத்தகத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.

இப்போது இந்த 20 நிமிடம் எதற்கும் செவி மடுக்காமல், மூளையை வேறு திசைக்கு மாற்றாமல் 20 நிமிடம் முழுவதும் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். சரியாக 20 நிமிடத்திற்கு டைமர் வைத்து பயிற்சி செய்யுங்கள். எந்த காரணத்தைக் கொண்டும் 20 நிமிடத்திற்கு அவ்விடத்தை விட்டு நகரக் கூடாது. வேறு எதிலும் கவனம் செலுத்தக் கூடாது. செல்லிடபேசி, கணினியை கண்டிப்பாக அந்த அறைக்குள் அனுமதிக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களையும் யாரையும் வரவேண்டாம் என்று கூறிவிடுங்கள்.
முதலில் ஒருசில நாள்கள் கடினமாக இருக்கும் இந்தப் பயிற்சியை தொடர்ந்து முயற்சித்தால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். முதல் சில நாள்கள் கவனச்
சிதறல் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்தால் கவனம் மேம்பட்டுவிடும்.

மணிக்கணக்கில் மேலோட்டமாகப் படிப்பதைவிட 20 நிமிடங்கள் ஆழமாகப் படிப்பது அதிக பலனைத் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை.

புதிய கற்றல் வழிமுறைகள்
சலிப்பைப் போக்கி கவனம் செலுத்துவதற்கான ஆர்வத்தை வளர்க்க வேண்டுமெனில் கற்றலில் புதிய வழிமுறைகளைக் கையாளலாம்.

உங்களுக்குப் பிடித்த பாடத்தை முதலில் தொடங்குங்கள். அந்த பாடத்திலும் உங்களுக்குப் பிடித்தமான தலைப்பை முதலில் தேர்வு செய்து படியுங்கள்.

அதைப்பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால் இன்னும் ஆர்வம் கூடும்.

இல்லையெனில் அந்த பாடத்தலைப்பு குறித்த விடியோ ஒன்றைப் பார்த்துவிட்டு அதனைப்பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டு புத்தகத்தைத் திறக்கலாம். இது உங்களைப் படிக்கத் தூண்டும்
மேலும் பாடப்புத்தகங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த படங்கள் கொண்ட அட்டைகளை வாங்கி புத்தகங்களை அழகாக வைத்திருங்கள். பல வண்ணங்களில் பேனாவை பயன்படுத்துங்கள். நீங்கள் படிக்கும் அறையை அழகாக வைத்திருங்கள்.

உடல் ஆரோக்கியம்:

உங்கள் மனமும், சிந்தனையும் ஒருசேர கவனம் செலுத்த வேண்டுமெனில் உடல் ஆரோக்கியம்
முக்கியம். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் அருந்துங்கள். நொறுக்குத் தீனிகள், துரித உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். உணவுக் குறைபாடு,
சத்தில்லாத உணவுகளைச் சாப்பிடுதல் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் நலம் கெட்டால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது.

தூக்கம்:

தூக்கம் என்பது மூளைக்கு கொடுக்கப்படும் உணவு. உங்கள் உடல் இயங்க, பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல இரவு நேரத்தில் சரியாக தூங்க வேண்டும். 7 மணி நேர தூக்கத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.

உடற்பயிற்சி:

உங்களது கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்க காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.
இதனால் கவனச் சிதறல் தவிர்க்கப்படுகிறது. நினைவாற்றல் அதிகரிக்கும். அதேபோன்று சிறிது நேரம் தியானம் செய்தால் மனம் ஒருநிலைப்படும். இது
கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கும்.

இலக்குகளுடன் தெளிவாக இருங்கள்!

சில நேரங்களில் நம்முடைய கவனம் சிதறுகிறது என்றால் இலக்கு சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று அர்த்தம். உங்களுக்கு ஏற்றபடி ஒரு சிறிய இலக்கேனும் நிர்ணயித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக வரும் தேர்வில் 90% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு படிக்கத் தொடங்க வேண்டும். ஒரு பேப்பரில் அதை எழுதி உங்கள் அறையில் அடிக்கப்படி கண்ணில் படும்படி ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நீங்கள் என்னென்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் ஓர் அட்டவணையாகத் தயார் செய்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.

துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எவரொருவரும் சாதனை செய்ய முடியும். முயற்சி, பயிற்சி, வாழ்வில் வெற்றி!

நன்றி: இளைஞர்மணி

Life-skills required for the younger generation


 இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் (Life-skills required for the younger generation)


கல்லூரிகளில் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி பெரும் சிறந்த மாணவர்களில், 25-30 சதவிகிதத்தினர் மட்டுமே, தரமான இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில், வேலை வாய்ப்பை பெறுகின்றனர். அவர்களிலும் ஒரு சிறு பகுதியினரே ஆற்றும் பணிகளிலும், பொறுப்புகளிலும் தம் திறமைகளைக்காட்டி மேலே மேலே முன்னேற முடிகிறது.

இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன? வாழ்க்கைப் பயணத்தில், தொடர்ந்து நீச்சலடித்து முன்னேற, இளைஞர்களுக்கு வெறும் படிப்பறிவு மட்டும் போதாது; இன்றியமையாத அடிப்படை வாழ்க்கைத் திறன்களும், மென் திறன்களும் வேண்டும் என்ற உண்மையைத்தான்!

உலக சுகாதார நிறுவனம் (WHO), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெற, 10 அடிப்படை வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என, பரிந்துரை செய்திருக்கிறது.

அவை:

1. தன்னைத் தானே அறிதல்:
ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகள், தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

2. தகவல் தொடர்பாற்றல்:
பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல், பிறர் புரிந்து கொள்ளும் விதமாக, தெளிவாக, உறுதியாக, பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளும் திறன் வேண்டும்.

3. பிறருடன் உறவு பேணும் திறன்:
ஆரோக்கியமான மனித உறவுகள் வாழ்வின் வெற்றிக்கான அடித்தளம். பிறருடன் கனிவு, மரியாதை, மனித நேயத்துடன் பழகி, நல்லுறவைப் பேணுதல் வேண்டும்.

4. உணர்ச்சிகளைக் கையாளும் திறன்:
தனது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், கையாளும் திறன். ஆங்கிலத்தில் ’எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ என்று கூறப்படுகிற உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு சார்ந்த திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

5. பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்:
பிறர் நிலையில் தன்னை இருத்திப் பார்த்து, பிறரது உண்மையான நிலையையும், தேவைகளையும் புரிந்துகொண்டு, பிறர் நலனில் கவனம் செலுத்தி செயலாற்றும் திறனைப் பெற வேண்டும்.

6. ஆழ்ந்து சிந்திக்கும் திறன்:
பார்த்து, கேட்டு, உரையாடி, அனுபவித்து, அலசி, சேகரித்த தகவல்களை, முறையாக கொள்கைப்படுத்த, நடைமுறைப்படுத்த, மதிப்பிட, வகை செய்யும் சிந்தனைத்திறனாம், ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வேண்டும்.

7. மாறுபட்டு சிந்திக்கும் திறன்:
ஒரே மாதிரியாகச் சிந்திக்காமல், (ஆங்கிலத்தில் ’கிரியேடிவ் திங்கிங்’) மாறுபட்ட அல்லது படைப்புச் சிந்தனையுடன், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேல் தீர்வுகளை தேடும் சிந்தனை வேண்டும். இது படைப்புத்திறன் சார்ந்த சிந்தனை.

8. முடிவெடுக்கும் திறன்:
முடிவெடுக்கும் நோக்கத்தை தெளிவாகப் புரிந்துகொண்டு, சாத்தியமான பல வழிகளைக் கண்டறிந்து, அவற்றில் சிறந்த வழியைத் தேர்ந்து, முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

9. பிரச்சினையைத் தீர்க்கும் திறன்:
பிரச்சினையை தெளிவாக வரையறுத்து, தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து, சிறந்த வழியை ஆய்ந்து தேர்ந்து, அதன் மூலம், பிரச்சினையைத் தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

10. மன அழுத்த மேலாண்மை:
மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஒருவர் ஆளாகும்போது, அதற்கான அடிப்படைக் காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும், தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, மன அமைதியையும், மன ஆரோக்கியத்தையும் விரைந்து அடையும் திறன் வேண்டும்.

மேற்கூறிய இத்திறன்கள் திடீரென்று கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க முடியாதவை. இளம் வயது முதலே பார்த்து, கேட்டு, படித்து, அனுபவித்து, கடைப்பிடித்து, கற்று அறிய வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்.

இவற்றை மாணவர்கள், இளைஞர்கள், இளம் பணியாளர்கள், படிப்படியாகக் கற்றுக் கடைப்பிடிக்க, பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தனிக்கவனம் செலுத்தி, நல்ல மாறுதல்களை இளம் சமுதாயத்தினரிடையே உருவாக்க வேண்டும்!

’எல்லையில்லா மனித வளம் இந்நாட்டில்!
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’

-ஏ.வி.ராமநாதன், மனித வள ஆலோசகர்

(இது ஒரு மீழ்பதிவு) 

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பண்புகள்!


 குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய பண்புகள்!


உங்கள் குழந்தைகளை சில மணி நேரங்கள் தனித்து விட்டால் அவர்கள் தன்னைத்தானே கவனித்துக்கொள்வார்களா? நீங்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்ய முடியுமா? குழந்தைப் பருவத்திலேயே சில விஷயங்களை தனியாக எதிர்கொள்ள பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளீர்களா?

குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிலும் சமூகத்திலும் நேர்மறை/எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின் குணநலன்கள், அவர்களது நடவடிக்கைகள் பெரும்பாலாக பெற்றோரின் வளர்ப்பிலேயே இருக்கிறது.

பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்க நினைக்கிறீர்கள். அதுபோல அறிவுரீதியான முக்கிய திறன்களையும் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். பள்ளிக் கல்வியைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:-

1. நேரத்தை நிர்வகித்தல்

குழந்தைப் பருவத்தில் நேரத்தை நிர்வகித்து என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் சில பண்புகள் வேண்டுமெனில் அவற்றை இளம்வயதிலேயே கற்றுக்கொடுப்பது நல்லது.

நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் கலையை இக்காலத்தில் ஒவ்வொருவரும் பெற வேண்டும். நேரத்தின் அருமை தெரிந்தவர்கள் மட்டுமே அதனை உபயோகமாக கழிக்க முடியும்.

அந்த வகையில், குழந்தைகள் பலரும் காலையில் தாமதமாக எழுந்து பள்ளிக்கும் தாமதகமாக செல்வர். இல்லையெனில் நீங்கள் அவர்களை பலமுறை எழுப்ப வேண்டியிருக்கும்.

நேரத்தை நிர்வகிக்க முதலில் சொல்லிக்கொடுக்க வேண்டியது, சரியான நேரத்தில் அவர்களை தானாகவே எழுந்திருக்க வைப்பது. குழந்தைகளை எழுப்பும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். அலாரம் வைத்து அவர்களையே எழுந்திருக்கச் சொல்லுங்கள்.

எந்த நேரத்தில் எழுந்தாள் சரியான நேரத்தில் பள்ளிக்குத் தயாராகலாம், பள்ளிப் பாடங்களை எப்போது முடிக்க வேண்டும், எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்றுக்கொடுங்கள்.

2. முடிவெடுக்கும் திறன்

கல்வி, வேலை, வாழ்க்கைத் துணை ஆகிய மூன்றும் ஒவ்வொருவரது வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்க வேண்டியவை. சிறு வயதிலிருந்தே நல்ல முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுங்கள்.

ஒவ்வொன்றுக்கும் பிடித்த விஷயங்களில் நன்மைகள், தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்க பழக்க வேண்டும்.

3. நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை வாழ்க்கைத் திறன்களில், இது மிகவும் அடிப்படையான ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, உங்கள் பிள்ளைகளின் செலவுகளுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கொடுங்கள். அத்துடன் சிறிது பணத்தை சேமித்து வைக்க ஊக்கப்படுத்துங்கள். அவர்களது செலவுகளையும் கண்காணித்து தவறான செலவுகளை சரிசெய்யுங்கள்.

தேவைப்படின், குழந்தை பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி, மாதம் ஒருமுறை அவர்கள் சேமித்து வைத்த, பரிசாகப் பெற்ற பணத்தை சேமித்து வையுங்கள். பணம் சேமிக்க நீங்களும் ஒரு சிறு தொகையை அவ்வப்போது கொடுத்து ஊக்குவிக்கலாம்.

4. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

அடுத்த தலைமுறையினருக்கு இன்றைய பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் மாசினை குறைக்கும் வழிகளில் ஈடுபடுவது ஆகியவற்றை குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே புகுத்துவது சுற்றுச்சூழல் மீதான அக்கறையுடன் இருக்க உதவும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏன் முக்கியம் என்பதை உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வீட்டிலேயே எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யுங்கள். உங்களிடம் கார் இருந்தால் ஓரிரு நாள்கள் பேருந்தில் பயணம் செய்து காற்று மாசினைக் குறைக்கலாம். வீட்டைச் சுற்றிலும் மரங்கள் நடுவது, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

5. பிரச்னைகலிருந்து மீளுதல், மற்றவர்களோடு பொருந்தி வாழ்தல்

உங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டிய இரண்டு முக்கிய திறன்கள் இவை. பிரச்னைகள் இன்றி மனித வாழ்க்கை இல்லை. பிரச்னைகளை கையாளத் தெரியாமல்தான் பலரும் இன்று தவறான முடிவுகளுக்குச் செல்கின்றனர். எனவே, பிரச்னைகளை எப்படி கையாள வேண்டும், அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள வேண்டும் என கற்றுக்கொடுங்கள்.

பிரச்னைகளுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் தீர்வு வழங்காமல் அவர்களேயே முடிவெடுக்கச் செய்து கண்காணியுங்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அடுத்ததாக உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரிக்கவும் அன்பு பாராட்டவும் கற்றுக்கொடுக்க வேண்டும். உறவினர்களின் மதிப்பை புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுப்பது இன்றியமையாதது, இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என தெரிந்துகொள்வார்கள். குழந்தைகளின் கல்வித்திறனுடன் வாழ்க்கைக்குத் தேவையான மற்ற திறன்களையும் அளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...