Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

எது மெச்யூரிட்டி ?


 எது மெச்யூரிட்டி ?


(டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை)

என்னைப் பொருத்தவரை மெச்யூரிட்டி என்பது வயதால் மட்டும் வருவதன்று.

ஒருவருக்கு வயதாவதால் மட்டுமே அவர் முதிர்ச்சி அடைவதில்லை.

மாறாக அவர் அன்றாட வாழ்வில் எத்தனை பேரைக் கடந்து வந்திருக்கிறார்.

அத்தனை பேரும் மற்றும் அவர்களுடைய வாழ்வும் எண்ணங்களும் சிந்தனைகளும் இவரது எண்ணங்களிலும் சிந்தனையிலும் என்னென்ன மாற்றங்களைச் செய்தன என்பதில் முதிர்ச்சி வருகிறது.

ஒருவர் இதுவரை எவ்வளவு பட்டங்கள் பெற்றார் என்பதில் மெய்யான முதிர்ச்சி இருப்பதில்லை.

மாறாக கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் வெளிய வாழ்க்கை ஒரு பாடத்தை சர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கிறதே.

அந்த பாடத்தை படித்து
வாழ்வு வைக்கும் தேர்வுகளில் வெற்றியோ தோல்வியோ மாறி மாறி அனுபவித்து சேமித்து வைத்திருக்கிறாரே ஒரு அனுபவம்
அதை முதிர்ச்சி என்கிறேன்.

ஒரு தோல்வியில் அனைத்தும் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் ஒரு வெற்றியில் அனைத்தும் வந்து விட்டது என்ற எண்ணத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து ஒரு வெற்றிக்குப் பின்னும் தோல்வி உண்டென்றும் ஒரு தோல்விக்குப் பின்னும் வெற்றி உண்டென்றும் உணர்வதில் உள்ளது மெச்யூரிட்டி.

நம்மை யார் விமர்சித்தாலும் யார் நம் தவறுகளைச் சுட்டிக் காட்டினாலும்
கடுப்பாகி கண் சிவந்து விமர்சித்தவர்களை கல்கொண்டோ சொல் கொண்டோ தாக்க எண்ணுவதில் இருந்தும் மாறி

நம் முன்னேற்றத்தில் நம்மை விமர்சிக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்ந்து

ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு மதிப்பளித்து
நமக்கு நேரதிர் கருத்துகளையும் மதித்து ஆராய்ந்து அதில் இருந்தும் பாடம் கற்று சுயமுன்னேற்றம் அடைவது மெச்யூரிட்டி

நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்கக்கூடாது
என்றும் மாற்றுக் கருத்துகளை பேசுபவரை எதிரி என்று நோக்கும் மனநிலையில் இருந்து

நமக்கு மாற்றுக் கருத்துகளையும் கனிவோடு செவிமடுத்து அந்த கருத்துகளைப் பேசுபவரையும் அரவணைத்து அதில் உள்ள உண்மையையும் தேவையற்றதையும் வடிகட்டி ஆராய்ந்து ஒன்றாகப் பயணிப்பது மெச்யூரிட்டி

காணும் அனைத்திலும்
பிறப்பு ரீதியாக இன ரீதியாக சாதி ரீதியாக
மத ரீதியாக மொழி ரீதியாக பிரிவினையைப் பற்றியே முதலில் யோசிக்கும் சிந்தனையில் இருந்தும் எண்ணத்தில் இருந்தும் வெளியேறி

கல்வி கற்று முன்னேறி பல பயணங்கள் மேற்கொண்டு பல ஊர்களை அடைந்து பல ஊர் தண்ணீர் குடித்து பல மனிதர்களைக் கண்டு நம் அனைவருக்கும் நோய்/ வலி/ மகிழ்ச்சி/ மரணம்/ பிரிவு / காதல் ஆகியவை ஒன்றாக இருப்பதை உணர்ந்து
வேற்றுமையை மறந்து ஒற்றுமையைப் பற்றி யோசித்தால் மெச்யூரிட்டி வந்திருக்கிறது என்று பொருள்

மரணத்தைப் பற்றி சிந்தனையே இல்லாமல்
இருப்பதைக் காட்டிலும்
நம்மிள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மரணமடையலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. காரணம் மரணம் குறித்த எண்ணம் மனிதனை மனிதனாக வைத்திருக்க உதவுவதால் அதற்கான ஒத்திகையை மன ரீதியாக பார்த்துக் கொண்டே இருப்பதும் என்னைப் பொருத்தவரை மெச்யூரிட்டி தான்.

டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...