Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?


 பள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்?


மேல்நிலைக் கல்வியில் எதைப் படிப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது என்று 10ம் வகுப்பு படிப்பை முடித்த மாணவர்களில் பலபேர் சொல்வதை கேட்டிருப்போம்.

இதில் நமக்கெல்லாம் பெரிதாக ஆச்சர்யம் எழுவதில்லை. சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, தங்களின் ஆற்றலை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்ற வித்தை, 90% மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில், நமது சமூக சூழல் அப்படி இருக்கிறது. நாம், மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்க விடுவதில்லை மற்றும் தூண்டுவதில்லை.

இக்கட்டுரை, மாணவர்கள், தங்களுக்குப் பொருத்தமான வழியை தேர்வுசெய்துகொள்ள உதவுகிறது.

விருப்பங்களை ஆய்வுசெய்தல்

மேல்நிலைக் கல்விக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்தலென்பது, பாறைகளோடு மோதுவதல்ல என்பதை மாணவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டும். பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை, தொடர்ச்சியான காலங்களில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகிவரும் சூழலில், ஒரு மாணவர், ஒற்றை வழியிலேயே செல்வதைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கடினம்.

10ம் வகுப்பு முடித்தவர்கள், முதலில் தங்களின் விருப்பம் எது என்பதை தெளிவாக ஆய்ந்து அறிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதற்கு வாய்ப்பு அதிகம் மற்றும் எதற்கு வாய்ப்பு குறைவு என்பதைப் பற்றி சிந்தித்து அறிய வேண்டும்.

ஒருவர், உயர்கல்வியில் ஆர்க்கிடெக்ட் படிக்க வேண்டுமானால், அவர் பள்ளி மேல்நிலைப் படிப்பில், வேதியியலையோ அல்லது உயிரியலையோ படிக்க வேண்டியதில்லை. ஒருவர் எதிர்காலத்தில் தத்துவம் படிக்க விரும்பினால், அதற்கு கட்டாயமாக கணிதத்தையோ அல்லது வணிகவியலையோ படிக்க வேண்டியதில்லை. எனவே, எதைப் படிப்பதற்கு எதை தேர்வுசெய்ய வேண்டும் என்பதை தெளிவான ஆய்விற்கு பிறகே முடிவுசெய்ய வேண்டும்.

சைக்கோமெட்ரிக் தேர்வு

பத்தாம் வகுப்பு நிறைவுசெய்த மாணவர்கள், வாய்ப்பிருந்தால், சைக்கோமெட்ரிக் எனும் ஒரு தேர்வில் பங்கேற்பது நல்லது. அத்தேர்வின் மூலமாக, தமக்கேற்ற துறை மற்றும் படிப்பை அவர்கள் அறிந்துகொள்ளலாம். அதேசமயம், இத்தேர்வை, பத்தாம் வகுப்பிற்கு முன்னதாகவே மேற்கொள்வது விரும்பத்தக்கதல்ல. ஏனெனில், அச்சமயத்தில், ஒருவரின் முதிர்ச்சித் திறன் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஒரு நல்ல சைக்கோமெட்ரிக் தேர்வென்பது, பல்வேறான ஆப்ஷன்களை வடிகட்டி, முக்கியத் துறைகள் அல்லது பிறவற்றிலுள்ள சாத்தியமுள்ள தொழில் வாய்ப்புகளைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு மாணவருக்கு வரலாற்றுத் துறையை தேர்வுசெய்ய மிகவும் விருப்பமாக இருக்கலாம். ஆனால், அவரால் தேதிகளை நினைவில் வைக்க முடியாமல் போகலாம்.

இந்த ஒரு குறைபாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு, அவரால் அத்துறை சார்ந்து எதையும் படிக்க முடியாது என்பது அர்த்தமல்ல. அவர், வரலாறு தொடர்பான இதர துணைநிலைப் படிப்புகளை மேற்கொள்ள முடியும்.

விசேட குணத்தை கண்டறிதல்

ஒருவர் ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றதனாலேயே, அவர் அப்படிப்பு சம்பந்தப்பட்ட துறையில் பெரியளவில் சாதிப்பதற்கு சிறப்பான தகுதியுடையவர் என்பது அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி எந்தவித கூடுதலான தேடுதலோ, ஆய்வோ மற்றும் ஆர்வமோ இல்லாத ஒருவர், அப்பாடத்தில் மனப்பாட முறையில் 100% மதிப்பெண் பெற்றிருப்பார். அதை வைத்து, அவர் வரலாறு, குடிமையியல் மற்றும் புவியியல் ஆகிய துறைகளில் சிறப்பாக சாதிக்க வல்லவர் என்பதை கட்டாயமாக முடிவுசெய்ய இயலாது.

அதேபோன்று, ஒரு மாணவர், கணிதப் பாடத்தில் 100% மதிப்பெண்களைப் பெற தவறியிருக்கலாம். வெறும் 75% மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருக்கலாம். ஆனால், 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களைவிட, அவர் கணிதத்துறையின் புதிய பரிணாமங்கள் பற்றி சிந்திப்பவராக இருப்பார்.

தன்னை நன்கு அறிந்த சிலரிடம் கருத்துக் கேட்பதில் தவறில்லை. தனக்கு எது ஒத்துவரும் என்பதைப் பற்றி, நல்ல விபரமான நபர்களிடம் ஆலோசனையும் கேட்கலாம். இதன்மூலம் ஒருவர் சரியான முடிவெடுப்பதற்கு தேவையான உதவிகளைப் பெறலாம்.

ஒரு துறையை ஆய்வுசெய்தல்

ஒரு குறிப்பிட்ட துறையில்தான் உயர்கல்வி மேற்கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தால், அத்துறையின் எதிர்காலம் பற்றி நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்க வேண்டும். அத்துறையில் தற்போது பணிபுரிவோர், உயர்ந்த மட்டத்தில் இருப்போர் மற்றும் அத்துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடி நிலவரத்தை கணிக்க வேண்டும்.

தொழில்துறை மற்றும் புரபஷனல் அசோசியேஷன்கள் மூலமாக மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட வலைதளங்களுக்கும் சென்று தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க. 

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...