Welcome

WELCOME to Education++

Wednesday, January 26, 2022

ATMA - Exam


 முக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு (ATMA Exam)


பல்வேறான முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, இந்திய வணிகப் பள்ளிகளுக்கான சங்கத்தால் (AIMS) நடத்தப்படும் நுழைவுத்தேர்வுதான் ஏ.டி.எம்.ஏ., எனப்படும் தேர்வு.

ஒரு மாணவரின் தகுதி மற்றும் திறமை ஆகியவற்றை சோதிக்க, இத்தேர்வு நடத்தப்படுகிறது.

கேட் தேர்வுக்குப் பிறகு, இந்தியாவின் பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் தேர்வாக இந்த ATMA தேர்வு திகழ்கிறது. இந்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நுழைவுத்தேர்வு, மேலாண்மைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மட்டுமே நடத்தப்படுவதில்லை. மாறாக, MCA படிப்பில் சேரவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

AIMS பற்றி...

இந்திய வணிகப் பள்ளிகளுக்கான சங்கத்தில்(AIMS), ஐ.ஐ.எம்.,கள் உள்ளிட்ட, சுமார் 600க்கும் மேற்பட்ட இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதன்மூலம், உலகிலேயே, இந்த வகையில் பெரிய அமைப்புகளில் ஒன்றாக AIMS திகழ்கிறது. நாட்டில், தரமான மேலாண்மை கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்வதே இதன் பிரதான நோக்கம்.

எனவே, இந்த நோக்கத்தை அடையும்பொருட்டு, மேலாண்மைப் படிப்புகளுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், ஒரு நல்ல தரமான நுழைவுத்தேர்வாக ATMA தேர்வை நடத்துவதில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது.

AIMS அமைப்பில் இருக்கும் பல்வேறான கல்வி நிறுவனங்களில், IIM -கள், கேட் தேர்வு மதிப்பெண்களை, தங்களின் முதுநிலை மேலாண்மை படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பயன்படுத்துகின்றன. அதேசமயம், இந்த அமைப்பில் இணைந்துள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட இதர பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ATMA தேர்வு மதிப்பெண்களை, மாணவர் சேர்க்கைக்கான அளவீடாக எடுத்துக்கொள்கின்றன. இதுதவிர, XAT, NMAT, CMAT போன்ற தேர்வு மதிப்பெண்களும் அடக்கம்.

இதுவரை, நாட்டின் 15 மாநிலங்கள், ATMA தேர்வை, தங்களின் அதிகாரப்பூர்வ நுழைவுத்தேர்வாக அங்கீகரித்துள்ளன. மேலாண்மைக் கல்வியை மேற்கொள்ள நினைக்கும் அனைவருமே, IIM -களில் படிப்பதையே முதல் விருப்பமாக கொண்டுள்ளனர். ஆனால், அனைவருக்கு அது வாய்ப்பதில்லை. தகுதியுள்ள பலருக்கும் கூட அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.

எனவே, அதுபோன்ற நபர்களுக்கு இந்த ATMA தேர்வு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், இந்த தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் பல இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், IIM அளவுக்கு புகழ்பெற்றவை இல்லை என்றாலும், நல்ல தரமான மேலாண்மை கல்வியை வழங்குபவை என்பதை மாணவர்கள் மறந்துவிடல் கூடாது. எனவே, IIM வாய்ப்பை தவற விட்டவர்கள், ATMA தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, அதன்மூலம் வேறு நல்ல மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்கலாம்.

தகுதி

ATMA தேர்வை எழுதுவதற்கென்று எந்த சிறப்பான தகுதி நிலைகளையும் AIMS வகுக்கவில்லை. ஆனால், இதற்கென்று சில குறிப்பான தகுதி நிலைகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வது முக்கியம். இத்தேர்வை எழுதவிருக்கும் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அதேசமயம், இறுதியாண்டு இளநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நீங்கள் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டீர்களா என்பது உறுதியான பிறகே, உங்களுக்காக மேற்படி வாய்ப்புகள் அனைத்தும் நிச்சயமாகும்.

தேர்வு முறை

நடத்தப்படும் முறையில், இத்தேர்வு மற்ற தேர்வுகளிலிருந்து மாறுபடுகிறது. ஒருவரின் மேலாண்மை திறனை சோதிக்கும் வகையில், விரிவானதொரு முறையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. வணிக மேலாண்மை சாராத இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களும் இத்தேர்வை எழுதலாம். அதற்காக அவர் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஒருவரின் திறனை சோதிப்பதுதான் இத்தேர்வின் முக்கிய நோக்கமே.

ATMA தேர்வில், 170 multiple choice கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 6 பகுதிகளில் இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒருவரின் verbal, quantitative, analytical reasoning போன்ற திறன்களை சோதிக்கும் வகையில், கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 ஆப்ஷனல் பதில்கள் இருக்கும். அவற்றில் சரியானதை தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் 30 நிமிடங்கள் வீதம், மொத்தம் 6 பிரிவுகளுக்கு 3 மணிநேரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1\3 மதிப்பெண் கழிக்கப்படும்.

தேர்வுக்கு தயாராதல்

தெளிவான கவனத்துடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பதே, இத்தேர்வுக்கு தயாராவதன் அடிப்படை அம்சம். தங்களின் பெற்றோர் மற்றும் இதர நபர்களின் வற்புறுத்தலின் காரணமாக, இந்த ATMA தேர்வை எழுதும் மாணவர்கள் பலர் இருக்கின்றனர். ஒருவர், இத்தேர்வை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் இறங்குவது முக்கியம்.

ATMA தேர்வை வெல்ல, உங்களுக்கு தேவைப்படும் திறன்கள், வகுப்பறைகளில் எளிதில் கற்றுக்கொடுக்கப்படும் விஷயங்கள் போன்றதல்ல. மாறாக, பயிற்சியின் மூலம் படிப்படியாக வளர்த்துக்கொள்ளக்கூடியதாகும். நீங்கள் எதில் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கிறீர்கள் என்பதை ஆய்ந்து, அதன்படி உங்களின் தயார்படுத்தலை தொடங்க வேண்டும். இத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான கோச்சிங் சென்டர்கள் உள்ளன.

ATMA போன்ற தேர்வுகளை வெல்ல வேண்டுமெனில், கவனம், தயாரிப்பு, தெளிவு மற்றும் வேகம் ஆகியவை பிரதான அம்சங்கள். மேலும், ஒருமுகத் தன்மை, நேர மேலாண்மை மற்றும் விரைவான செயல்பாடு ஆகியவையும் முக்கியமான காரணிகள்.

ATMA 2022

தேர்வு நாள்: 13-02-2021
பதிவு தொடக்கம்: 08-12-2021
பதிவு முடிவு: 06-02-2022
கட்டணம் செலுத்த கடைசிநாள்: 06-02-2022
அனுமதி சீட்டு பதிவிறக்கம்: 10-02-2021
தேர்வு முடிவு: 19-02-2022

மேலும் விபரங்களுக்கு:
https://www.atmaaims.com

•••••••••

What is ATMA Exam?

AIMS Test for Management Admissions or ATMA is a national-level exam conducted by the Association of Indian Management Schools (AIMS) for admission to MBA, PGDM, MCA and PGDBA courses. The exam is conducted four times a year. More than 500 management institutes across India accept ATMA scores for admission to their management programmes. The test aims to assess the aptitude of candidates which is necessary for higher management studies.

https://www.atmaaims.com

https://www.shiksha.com/mba/atma-exam

https://collegedunia.com/exams/atma

No comments:

Post a Comment

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ! GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்...