Welcome

WELCOME to Education++

Sunday, August 17, 2025

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...


ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

(TOEFL - Test of English as a Foreign Language)

ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

என்ன ஸ்பெஷல்?

டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.

https://www.ets.org

TOEFL 
Test of English as a Foreign Language is a standardised test to measure the English language ability of non-native speakers wishing to enroll in English-speaking universities. The test is accepted by more than 11,000 universities and other institutions in over 190 countries and territories. 

Fee: iBT: US$ 185 and up, depending on the country.

Year started: 1964; 58 years ago

Prerequisites / eligibility criteria: No official prerequisite. Intended for non-native English speakers

Countries / regions: 4,500 test centers in over 190 countries and territories.

Score / grade validity: 2 years

Scores / grades used by: More than 11,000 colleges, agencies and other institutions in over 150 countries.

Annual number of test takers: 2.3 million

(இது ஒரு மீள் பதிவு)

Saturday, August 16, 2025

பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?

பி.காம் எனும் இளநிலை வணிகவியல்: இது படிச்சா இவ்வளவு வாய்ப்புகளா?

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் குறிப்பாக பி.காம் போன்ற படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐடி துறைகளிலும் பி.காம் தேவை அதிகரித்திருப்பதே. பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமர்த்திக் கொள்கின்றன. 

பி.காம் படித்தால் என்ன வேலை இருக்கு ? 

பி.காம். (B. Com எனும் Bachelor of Commerce) படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக்கூடிய பட்ட மேற்படிப்புகள் உள்ளது. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது கட்டாயம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட் படித்து ஆசிரியர் பணியிடத்துக்குக் கூட செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

போட்டித் தேரிவுகளில் பி.காம்..! 

பி.காம். படிப்பவர்களுக்கு காலை, மாலை உள்ளிட்ட பல வசதியான நேரங்களில் கல்வி நிறுவனங்கள் மேற்படிப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக முடியும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை எளிதில் அடையமுடியும். 

பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது. 

உலக வங்கியில் பி.காம் மாணவர்கள்..! 

தாய்மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற கூடுதல் மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கிறது. 

பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்ல எளிமையான வழிகள் கிடைக்கும். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது கட்டாயமாகும். 

நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பி.காம்.! 

தற்போதுள்ள போட்டிகள் நிறைந்த உலகில் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கில்லை. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் பி.காம் மாணவர்களுக்கே உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பி.காம் தொடர்புடைய மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது. 

வங்கிகளை ஆட்டிப்படைக்கும் பி.காம்..! 

கணினித்துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை எவ்வித தயக்கமும் இன்றி தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் இத்துறையில் அனுபவம் மிக்கவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும். 

உங்கள் கையில் பங்குச் சந்தை! 

மாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் போன்ற பி.காம் தொடர்புடைய பட்ட மேற்படிப்பினை மும்பை பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டுத் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் காப்பீட்டு மேலாண்மை, ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம். 

பி.காம்., படிக்க என்ன தகுதிகள் தேவை ! 

மூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க காமர்ஸ் பாடத்தொகுப்பில ்12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்த வகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம். 

வளமான வாழ்வு நிச்சயம்..! 

அனைத்துத் துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றில், பி.காம். என்பது மிகவும் சாதகமான ஓர் அம்சமாக தற்போது உருபெற்றுள்ளது. பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு மேற்கொண்டால் வளமான வேலை வாய்ப்பைப் பெறலாம்.

#AKV #அடியற்கை கல்வி வழிகாட்டி

Wednesday, January 26, 2022

Gate Exam - Topper's Tips

GATE 2022: தேர்வுக்கு எப்படி தயார் ஆகப் போறீங்க? டாப்பர்ஸின் டிப்ஸ் இதோ!

GATE மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்தவரை பல மாதிரி தேர்வை எழுதுவது சிறந்தது ஆகும். இது, தவறுகளில் கவனம் செலுத்தவும் தேர்வின் போது நேரத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.

காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) நடத்தும் பொறியியல் பட்டதாரி திறனாய்வு தேர்வு (GATE 2022) வரும் பிப்ரவரி 5,6,12,13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வானது உயர் பொறியியல் நிறுவனங்களில் முதுகலை திட்டத்தில் மாணவர்களை சேர்க்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்சேர்ப்புக்காக நடத்தப்படுகிறது.

இதற்கான நுழைவுச் சீட்டு ஜனவரி 3, 2022 அன்று வெளியிடப்பட்டது.

GATE தேர்வு மிகவும் கடினமானது என்கிற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், முந்தைய ஆண்டுகளில் முதலிடம் பெற்றவர்கள் சரியான மனநிலை மற்றும் உறுதியுடன் இருந்தால், இந்த தேர்வு கடினம் கிடையாது. GATE 2022ஐ எளிதாக வெல்ல டாப்பர்கள் வழங்கிய டிப்ஸ்களை கீழே காணுங்கள்

என்ன தேர்வனு ஃபர்ஸ்ட் தெரிஞ்சுக்கோங்க:

GATE என்பது தேசிய அளவிலான தேர்வு என்பதை அனைத்து தேர்வர்களும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தான், படிப்பதற்கு இறங்கும் முன்பு மனதளவில் தங்களை தயார் படுத்திட முடியும். GATE 2022 தேர்வு முறை, தேர்வுத் திட்டம் ஆகியவற்றை அறிந்துகொண்டதால், தேர்வுக்கு எளிதாக தயாராகிட முடியும்

GATE 2022 பாடத்திட்டம்

GATE பாடத்திட்டத்தை குறித்த புரிதல் முதலில் வேண்டும். ஒரு வெள்ளை தாளை எடுத்துக்கொண்டு, இரண்டு செக்ஷனாக பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு சைடில், கடினமான பாடங்கள் குறித்த விவரங்களையும், மற்றொரு சைடில் எளிதான பாடங்கள் விவரங்களையும் பதிவிட வேண்டும். இது பாடத்திட்டத்தை நன்கு பகுப்பாய்வு செய்ய உதவுவதோடு, தயாரிப்பு செயல்முறைக்கு உறுதியான திட்டமிடலையும் வழங்கிடும்.

டாபிக்கை பிரித்துகொள்ளுங்கள்

நேர அட்டவணை மற்றும் படிக்க தொடங்குவதற்கு முன்பு, ஒரு கடினமான தலைப்பை ஒரு எளிதான பாடத்துடன் இணைத்து படித்துக்கொள்ள வேண்டும். இரண்டிற்கும், 15 நாள்கள் படிக்க ஒதுக்கீடு செய்யுங்கள். பின்னர், 6 முதல் 7 முறை ரிவைஸ் செய்துகொள்ளுங்கள். இந்த முறையிலே அனைத்து பாடங்களையும் பின்பற்றுங்கள்

முந்தைய ஆண்டு பகுப்பாய்வு

பழைய GATE தேர்வின் வினாத்தாள்களை சேகரித்துக்கொள்ளுங்கள். கேள்விகளின் வடிவமைப்பைப் புரிந்து கொள்ள அனைத்து வினாத்தாள்களையும் முழுமையாக பகுப்பாய்வு செய்யவும். GATE பெரும்பாலும் கருத்தாக்கம் மற்றும் எண் அடிப்படையிலான கேள்விகளை உள்ளடக்கியது என முந்தைய தேர்வர்கள் கூறுகின்றனர்.

படிக்கும் முறை

தினமும் குறைந்தது 5-6 மணிநேரம் படிக்க வேண்டும்.கருத்துகளைக் கற்கவும், எண்களைப் பயிற்சி செய்யவும், பாடங்களை ரிவைஸ் செய்திடவும் உங்கள் நேரத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்

பாடப்புத்தகங்கள்

அட்வான்ஸூடு நூல்களைப் படிக்கத் திட்டமிடும் முன், அனைத்து கருத்துகளையும் கொண்ட ஒரு GATE 2022 புத்தகத்தைக் கண்டறியுங்கள். பாடப்புத்தகத்தை சில முறை படித்து, அதிலிருந்து விரிவான குறிப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள். நிலையான புத்தகங்களில் இருந்து அனைத்து தலைப்புகளையும் முழுமையாக படித்தப்பிறகு, அட்வான்ஸ்டு பாடப்புத்தகங்களு செல்வது சிறந்த சாய்ஸ் ஆகும்.

மாதிரி தேர்வுகள்

Gate மாதிரி தேர்வுகளை பல பயிற்சி மையங்கள் நடத்தி வருகின்றன. முடிந்தவரை பல மாதிரி தேர்வை எழுதுவது சிறந்தது ஆகும். இது, தவறுகளில் கவனம் செலுத்தவும் தேர்வின் போது நேரத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.

GATE வினாத்தாள்கள்

GATE 2022-ஐ கிராக் செய்வதற்கான கடைசி நிமிட உத்தியானது, விண்ணப்பதாரர்கள் வழக்கமான பயிற்சி மற்றும் GATE முந்தைய ஆண்டு வினாத்தாள்களை செக் செய்ய வேண்டும். உங்கள் தயாரிப்பு மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாணவர்கள் அச்சமின்றி GATE தேர்வின் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

GATE 2022 தேர்வானது M.Tech-இல் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. GATE 2022ல் மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்ட 65 கேள்விகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Integrated Courses After +2


 பிளஸ் 2-வுக்குப் பிறகு: ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு (Integrated courses) நல்லதா?

ஓர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அதையொட்டி முதுகலைப் பட்டப் படிப்பைத் தனியாகப் படித்து வந்ததே காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை. புத்தாயிரத்துக்குப் பிறகு ‘கன்கரன்ட் பாடத்திட்டங்கள்’ சில பல்கலைக்கழகங்களில் அறிமுகமாயின. ஒரு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டு தொலைதூரப் படிப்பாக இன்னொரு பட்டப் படிப்பையோ பட்டயப் படிப்பையோ படிக்க வசதியாக இந்தப் படிப்பு அறிமுகமானது.
ஆனால், அதில் ஏற்பட்ட குளறுபடிகளால் அந்தப் படிப்பு விரைவிலேயே மூடுவிழா கண்டது. அதன்பிறகு அறிமுகமான படிப்புகள்தாம் ‘ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள்’. இந்தப் பட்டப்படிப்பு நல்லதா?
பிளஸ் டூவை முடித்த பிறகு இளங்கலை பிறகு முதுகலை (3+2 ஆண்டுகள்) என்ற நடைமுறைக்கு மாறாக, படிப்பைத் தொடங்கும்போது முதுகலைப் படிப்பையும் உறுதிசெய்யும் படிப்புதான் இது.
ஒவ்வொரு படிப்பைப் பொறுத்தும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளின் காலம் மாறுபடுகிறது. 4 முதல் 7 ஆண்டுகள் வரையிலும்கூட ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் 5 அல்லது 4 ஆண்டு காலப் படிப்பாக ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன
சாதகம் என்ன?
காலங்காலமாகப் படித்துவந்த நடைமுறைக்கு மாறாக இந்தப் படிப்பைப் படிப்பது நல்லதா, கெட்டதா? “பெரிய பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கே இந்தப் படிப்பு கிடைக்கிறது. மற்ற படிப்புகளைவிட இந்தப் படிப்புக்குப் போட்டி குறைவு; கட்-ஆப் குறைவு.
நன்கு பரிச்சயமான பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்பை வழங்குவது சாதகமான விஷயம். ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு அல்ல. இந்தப் படிப்பைப் படிப்போர், வளாக நேர்காணலிலேயே வேலைக்குத் தேர்வாகிவிடவேண்டும்” என்கிறார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது இளங்கலை படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிடுகிறார்கள். ஒருங்கிணைந்த படிப்பைப் படித்தவர்கள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அதிகப்படியான கல்வித் தகுதியாக நினைத்து வேலை கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு.
“எம்.எஸ்சி. எம்.டெக்.கில் ஒருங்கிணைந்த படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வருவது கஷ்டமாகிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் வேலைக்கு எடுக்கும்போது 4+2 ஆண்டுகள் படித்தவர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு படித்தவர்களைப் பரிசீலிப்பதில்லை.
ஒருவர் அறிவியலில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பைப் படிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் எம்.எஸ்சி. படித்துவிட்டு எம்.டெக். பண்ணலாம். அப்படிப் படித்துவிட்டு ஆசிரியர் பணிக்குப் போகும்போது கல்வித் தகுதி பற்றிய கேள்வி எழுகிறது. ஆசிரியர் பணிக்குப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
வேறு வேலையை எதிர்நோக்கிப் படிப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். ஆனால், வளாக நேர்காணலிலேயே தேர்வாகிவிட வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
எப்படித் தேர்வு செய்வது?
இந்தப் படிப்பைத் தேர்வுசெய்யும் மாணவர்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டி ருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ தன்னாட்சிக் கல்லூரிகளோ எதுவாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்களைத் தேர்வுசெய்வதே நல்லது.
படிப்பில் சேரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் படித்துவிட்டு வெளியே வரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இதை மனத்தில் வைத்து, உரிய தொழில்நுட்பங்களைப் பாடத்திட்டங்களில் அவ்வப்போது புகுத்தும் கல்வி நிறுவனங்களில் சேர முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
“ஒரே கல்லூரியில் ஒருங்கிணைந்த படிப்பைப் படிக்கும்போது அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதுவே இளங்கலையை ஒரு கல்லூரியிலோ முதுகலையை வேறொரு கல்லூரியிலோ படித்தால் வெவ்வேறுவிதமான உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல இளங்கலையில் ஒரு படிப்பைத் தேர்வுசெய்து படித்தால், அதன் பிறகு யோசித்து முதுகலையில் இன்னொரு படிப்பில் சேரலாம். ஆனால், ஒருங்கிணைந்த படிப்பில் தொடக்கத்திலேயே முதுகலைப் படிப்பை முடிவு செய்துவிடுவதால், வேறோரு படிப்பை இடையில் யோசிக்க முடியாது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கா. கார்த்திகேயன்.
வழக்கமாக 10+2+3+2 அல்லது 10+2+4+2 என்று உயர்கல்வியைப் படிப்பவர்களைத்தான் தொழிற் நிறுவனங்கள் வேலைக்குத் தேர்வு செய்கின்றன. ஒருங்கிணைந்த படிப்புகளைப் படித்துவிட்டுச் செல்லும்போது வாய்ப்பு கொஞ்சம் குறைகிறது என்பதே யதார்த்தம். அதற்காக ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு என்று அர்த்தம் கிடையாது.
இந்தப் படிப்பைப் படித்தவர்கள் மத்திய மாநிலத் தேர்வாணையங்கள் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். இந்தப் படிப்பைப் படிப்போர் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பைப் உறுதி செய்வது நல்லது என்பதை மறந்துவிடக் கூடாது.
எங்கெல்லாம் படிக்கலாம்?
ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் மத்திய பல்கலைக்கழங்களில் வழங்கப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் போன்றவையும் இந்தப் படிப்பை வழங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. எலெக்ட்ரானிக்ஸ் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லைப் சயின்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சில குறிப்பிட்ட படிப்புகள் சில பல்கலைக்கழங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
நன்றி: இந்து தமிழ்

Decision Making


 முடிவெடுக்கக் கற்றுக்கொள்வோம்!

(Decision making)

வாழ்க்கை எப்போதும் ஒரே பாதையில், ஒரே மாதிரியாக செல்வதில்லை. புதிய புதிய நிகழ்வுகளும், தொடர்புகளும், இன்பமும், துன்பமும், குழப்பமும், மகிழ்ச்சியும் மாறி மாறி பின் தொடரும் நிலையில் தான் உள்ளது. புதிய இடங்கள், கடந்த கால நினைவுகள், நட்புகள் என வாழ்க்கை எதோ ஒன்றை எப்போதும் கற்க வைத்துக் கொண்டே இருக்கிறது.

நல்லவையும், கெட்டவையும் நம் முன்னால் நமக்கு தெரிந்தவாறே இருக்கின்றன. அதனை தேர்ந்துகொள்வதும், தேர்ந்துகொள்ளாததும் நம் உரிமை என்றாலும், அதனை நமக்கானதாக்கிக்கொள்வது பல நேரங்களில் நமக்கு விருப்பப்படாமலே நிகழ்ந்துவிடுகின்றது என்பதுதான் உண்மை. காலமும், சூழ்நிலைகளும் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டெ இருக்கிறது.

காரணிகள்

தேர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் நமதாக இருந்தாலும், அதில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் தாக்கம் அதிகமான பங்கினை வகிக்கிறது. தெளிவாக, சுயமாக முடிவெடுப்பவர்கள் சுற்றி இருப்பவர்களைக் குறித்து தெளிவுடன் இருப்பதால், தங்கள் தேர்வுகளை சிறப்பாக அமைத்து, வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி விடுகின்றனர். ஆனால் இப்படி முடிவெடுப்பவர்கள் வெகு சிலரே.

தங்கள் நண்பர்கள், உறவினர்கள், சக பணியாளர்களின் எண்ணங்களையே தனது முடிவுகளாகக் கொண்டவர்கள், முடிவுகள் தவறானவுடன் சுற்றி இருப்பவர்களைக் குறை கூறுபவர்களாக இருக்கிறார்கள். முடிவெடுப்பதில் பல காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது தேவைகள் குறித்த கடந்த கால, எதிர்காலங்கள். முடிவெடுக்கும் சூழ்நிலையில் உள்ள கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த திட்டமிடல்கள் என யாவும் ஒருங்கிணைந்து தேர்ந்தெடுப்பதற்கு துணை புரிகிறது. அதனால் விளையும் நன்மைகள், பாதிப்புகள் என அனைத்தையும் சிந்தித்துதான் தெளிவான முடிவினை எடுக்க முடியும்.

ஆனால் எல்லோரும் இதே போன்று சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அந்த நேரத்தில் என்ன நினைவில் இருக்கிறதோ அதனை மையமாகக்கொண்டு முடிவெடுத்து, அதன் வழியில் சென்றே முடிவுகளை மாற்றிக்காட்டுபவர்களும் உள்ளனர். எடுத்த முடிவில் இறுதி வரை நிலைத்திருப்பதும் அல்லது சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து முடிவினை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதும், ஒருவரின் தனிப்பட்ட திறமை.

வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சிறு சிறு முடிவுகளையும் நாமே எடுத்து பழக வேண்டும். உதாரணத்திற்கு உணவகத்திற்கு செல்கிறோம் என்றால், "நீங்களே சொல்லுங்கள், நீங்களே சொல்லுங்கள்" என ஒருவர் மற்றொருவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் இருவரும் ஒரே உணவை பெற்று உண்பார்கள். தங்களுக்கு பிடித்த உணவு குறித்த ஆசை மனதில் இருந்தாலும், மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற குழப்பத்திலேயே தனக்கான தேவையை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே வைத்து, உண்ணும் உணவின் சுவையை நாவில் உணர மாட்டார்கள்.

இதே போன்றுதான் முடிவுகள் எடுக்கும்பொழுதும் தனக்கான சரியான தேவையை உணராமல், அடுத்தவரின் முடிவுகளை ஆராயாமல் தனதாக்கிக்கொள்ளும்போதும் நேரிடும். எடுக்கும் முடிவுகளுக்கு தானே பொறுப்பு என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும், பின்னோக்கி வராமல் முயற்சியோடு, தளராமல் முடிவுகளின் பாதையில் வெற்றி காண வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.

அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு என்பதை முழுதாக உணர்ந்தாலே போதும். முடிவுகள் எடுக்கும்பொழுது பெரும் மனக்குழப்பத்திற்குள்ளாகாமல், தெளிந்த நிலையில் ,எடுத்த வேலையில் வெற்றி தரும் முடிவினை எடுக்கலாம்.

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்... (TOEFL - Test of English as a Foreign Language) ஒரு மாணவரின் ஆங்க...